search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் முறை"

    புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாணவர் ஆன்லைன் கவுன்சிலிங்கை ரத்து செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

    இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் சென்டாக் மூலம் ஒரே விண்ணப்பத்தின் கீழ் மாணவர் சேர்க்கை முறை அமல்படுத்தப்பட்டது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம், கட்டணம் பெறப்பட்டது. அனைத்து படிப்புகளும் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது.

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கு முதல் 2 கட்டமாக ஆன்லைன் கவுன்சிலிங் நடந்து மாப்அப் கவுன்சிலிங்கும் முடிந்துள்ளது.

    இந்நிலையில் சென்டாக் நிர்வாகம் திடீரென ஆன்லைன் கவுன்சிலிங்கை ரத்து செய்துள்ளது. மீண்டும் சென்டாக்கில் நேரடி கவுன்சிலிங்கிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை, பி.டெக். உள்ளிட்ட படிப்புகளுக்கு பிள்ளைச்சாவடியில் உள்ள அரச என்ஜினீயரிங் கல்லூரியில் நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) பி.டி.எஸ்., ஆயுர்வேதம் படிப்புகளுக்கும், 30-ந்தேதி பி.டெக். சுயநிதி, பி.எஸ்.சி. வேளாண் மற்றும் தோட்டக்கலை, 31-ந்தேதி உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கும், 2, 3-ந்தேதிகளில் பிடெக், 4-ந்தேதி பி.பார்ம்., பி.ஏ., எல்.எல்.பி. படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×